நேற்று முன்தினம் நள்ளிரவில் சிதம்பரம் முக்கிய வீதியான தெற்கு வீதியிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கூச்சல், ஆட்டம், பாட்டம் என அப்பகுதியே களைகட்டியது.
இரவு காட்சி சினிமா முடிந்து திரும்பிய சிலர் திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்று உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ருவாண்டா, கென்யா மாணவ, மாணவிகள் ஒன்று கூடி காக்டைல் பார்ட்டி நடத்தி உள்ளனர். மாணவ, மாணவிகள் அரை குறை ஆடைகளுடன் ஆபாசமாகவும் ஆடியுள்ளனர்.
திருமண மண்டபத்திலிருந்து பாட்டு மற்றும் கூச்சல், விசில் சத்தம் அதிகரிக்கவே சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிதம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சென்று பார்த்து அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
அப்போது சீருடையில் இல்லாத போலீசாருக்கும், போதையில் இருந்த மாணவர்களுக்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டு சிலர் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் போலீசார், வெளிநாட்டு மாணவர்களை விரட்டியடித்தனர். மாணவ, மாணவிகள் தாங்கள் வந்த வாகனங்களில் வெளியேறினர்.
மதுபானம் எடுத்து வந்த சிலரையும், திருமண மண்டபத்தை சேர்ந்த சிலரையும் விசாரணைக்காக நகர காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
வெளிநாட்டு மாணவர்கள், சிதம்பரம் மற்றும் புதுவையில் உள்ள மாணவர்கள் மாதந்தோறும் பிரேயர் என்ற பெயரில் சிதம்பரத்தில் சில இடங்களில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து ஒரு மணி நேரத்துக்கு ரூ.1000 என கொடுத்து இதுபோல் கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். திருமண மண்டபத்துக்கு புதுவையிலிருந்து காரில் மதுபானம் எடுத்து வந்த ஹரிசங்கர்(23), நிசான்அகமது(24) ஆகிய இருவரையும் பிடித்து, அவர்கள் எடுத்துவந்த மதுபானங்கள் சுமார் 40 பாட்டில்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்துள்ளோம்.
இதுபோன்று நிகழ்ச்சிகள் நடத்துவதை கட்டுப்படுத்த சிதம்பரம் நகரில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்களை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
No comments:
Post a Comment